×

நெசப்பாக்கம் டாஸ்மாக் கடை முன் போதையில் தகராறு போலீஸ் விசாரணைக்கு சென்ற ஆட்டோ டிரைவர் திடீர் சாவு: போலீசார் தாக்கியதால் இறந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: நெசப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்ததாக எம்ஜிஆர் நகர் போலீசார் கார் டிரைவர் ஒருவரை காவல் நியைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய பிறகு வீட்டிற்கு அனுப்பிய நிலையில், கார் டிரைவர் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த கார் டிரைவரின் உறவினர்கள் போலீசார் தாக்குதலில் தான் அவர் இறந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60).

வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு, காவேரி என்ற மகள் மற்றும் வெங்கடேசன் (28) என்ற மகன் உள்ளனர். வெங்கடேசன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர், தனக்கு திருமணம் ஆகாததால் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலை வெங்கடேசன் நெசப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண் 632ல் மதுபானம் வாங்கி குடித்துள்ளார்.

போதை தலைக்கேறியதும், டாஸ்மாக் கடை முன் நின்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின் படி, எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் பூப்பாண்டித்துரை நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது வெங்கடேசன் போதையில் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த உதவி ஆய்வாளர் பூப்பாண்டித்துரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, பணியில் இருந்த தலைமை காவலர்களான சரவண பெருமாள் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை அழைத்துள்ளார். அதன்படி விரைந்து வந்த தலைமை காவலர்கள் 2 பேர், போதையில் தகராறு செய்த வெங்கடேசனை மாலை 6 மணிக்கு காவல் நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர்.

மேலும், வெங்கடேசன் பெற்றோருக்கும் தகவல் அளித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு, பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வெங்கடேசன் போதையில் புலம்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை வீட்டில் உள்ள அறையில் தூங்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பிறகு நேற்று காலை 5.45 மணிக்கு ராஜேந்திரன் வீட்டில் உள்ள மளிகை கடையை திறக்க வந்த போது, மயங்கி கிடந்த மகன் வெங்கடேசன் சுயநினைவின்றி இருந்தது தெரியவந்தது. உடனே தனது மகள் கணவர் தண்டபாணிக்கு தகவல் தெரிவித்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வெங்கடேசனை பரிசோதனை செய்த போது, அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ராஜேந்திரன் எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் பிஎன்எஸ் 194 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் இறந்த வெங்கடேசன் உறவினர்கள், டாஸ்மாக் கடை முன்பு நடந்த தகராறில் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசியதால், அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். இதனால் வெங்கடேசன் உடலில் உள்காயம் ஏற்பட்டு போதையில் தூக்க நிலையில் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இருந்தாலும் உயிரிழந்த வெங்கடேசன் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான், அவர் மது போதையில் நாக்கு வறண்டு உயிரிழந்தாரா அல்லது போலீசார் தாக்கியதில் இறந்தாரா என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தரப்பில் தகராறில் ஈடுபட்ட வெங்கடேசனை ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். அதிக போதையில் அவர் இருந்ததால், ஆட்டோவில் இருந்து இறக்காமல் அவரது ெபற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பிவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வந்து ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்ற நிலையில் இறந்தது தொடர்பாக உயர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெசப்பாக்கம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் விசாரணை முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tasmac ,Nesapakkam ,Chennai ,MGR Nagar police ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...