×

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 2026-27ம் கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு வரும் 15 முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் (தொடக்கக் கல்வி) ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு 2026-27ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது. எனவே மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை எமிஸ் இணையதளத்தில் ஜூன் 15 முதல் 22ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். மாறுதலுக்கு விருப்பம் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பொது மாறுதல் கலந்தாய்வின்போது, 100 சதவீதம் பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத் திறனாளி குழந்தையின் பெற்றோர், சிறுநீரக அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றவர்கள், விதவை, மனைவியை இழந்தவர், 40 வயது கடந்த முதிர் கன்னியர், விவாகரத்து பெற்ற ஆசிரியை, தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித்துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 25ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Chennai ,Kannappan ,Naresh ,
× RELATED முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட...