×

விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.7,585 கோடி: உபிக்கு ரூ.9,721.48 கோடியுடன் முதல் இடம்; ரூ.8,508 கோடியுடன் 2வது இடத்தில் மேற்குவங்கம்

புதுடெல்லி: விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.7,585 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. ரூ.9721 கோடியுடன் உபி முதல் இடத்திலும், ரூ.8508 கோடியுடன் மேற்குவங்கம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

முழுவதும் ஒன்றிய அரசின் நிதியில் நடக்கும் இந்த திட்டத்திற்கு மாற்றாக பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் என்கிற விபி ராம் ஜி திட்டத்தை அறிமுகம் செய்தது. 100 நாளுக்கு பதில் 125 நாள் வேலை வழங்கும் இந்த திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தை சுமூகமாக மாற்றம் செய்ய வசதியாக நேற்று ஒன்றிய அரசு ரூ. 95,692 கோடி இடைக்கால நிதியை அறிவித்தது.

இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு பற்றி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கூறியதாவது:  விபி ஜி ராம் ஜி திட்டத்தில் எந்தவொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீட்டில் குறைப்பு இருக்காது. இதுதொடர்பாக ஒவ்வொரு மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களையும் சந்தித்து தெளிவுபடுத்தி விட்டோம். புதிய திட்டத்திற்கான வரைவு விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

எனவே ஜூன் 30க்குப் பிறகு 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக ரூ.95,692 கோடி இடைக்கால நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தவித சிரமமும் இன்றி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திலிருந்து விபி ராம் ஜி திட்டத்திற்கு நாங்கள் மாறுகிறோம். வேலை கிடைப்பதில் ஒரு நாள் கூட இடைவெளி இருக்காது.

இடைக்கால நிதி ஒதுக்கீடு அடிப்படையில் உத்தரப் பிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9,721.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திற்கு ரூ. 8,508 கோடி, தமிழ்நாட்டிற்கு ரூ. 7,585.49 கோடி, ராஜஸ்தான் ரூ. 7,581.87 கோடி, ஆந்திரப் பிரதேசம் ரூ. 7,707.21 கோடி, பீகார் ரூ. 6,715.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 92,550.17 கோடியாகவும், யூனியன் பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 1,291.52 கோடியாகவும் உள்ளது.

மேலும் ஒன்றிய நிர்வாகம் மற்றும் சமூகத் தணிக்கைக்காக கூடுதலாக ரூ. 1,850.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த ஒதுக்கீடு ரூ. 95,692.31 கோடியாக உயர்கிறது. மாநிலங்களின் 40 சதவீத கட்டாயப் பங்களிப்பைச் சேர்த்த பிறகு, இத்திட்டத்தின் கீழ் மொத்த ஆண்டுச் செலவுத் தொகை சுமார் ரூ. 1.51 லட்சம் கோடியாக இருக்கும்.

புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை 26 மாநிலங்கள் பூர்த்தி செய்துவிட்டதாகவும், ஜார்க்கண்ட், கர்நாடகா, தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் இன்னும் அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக நிறைவு செய்யவில்லை. இருப்பினும், இம்மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக ஒன்றிய அரசுக்கு உறுதியளித்தனர். இவ்வாறு தெரிவித்தார்.

* தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு?
100 நாள் வேலை திட்டம் முழுவதும் ஒன்றிய அரசின் நிதியில் இதுவரை நடந்து வந்தது. விபி ஜி ராம் ஜி திட்டத்தில் 60 சதவீதம் ஒன்றிய அரசு பங்களிப்பும், 40 சதவீதம் மாநில அரசு பங்களிப்பும் தேவை. இடைக்கால நிதி ஒதுக்கீடு அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.7,585.49 கோடி நிதி ஒதுக்கீடு ஒன்றிய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்படி பார்க்கும் போது தமிழ்நாட்டிற்கான இடைக்கால மொத்த நிதி ரூ.12,649.15 கோடியாகும். இதில் ரூ.5059.66 கோடியை தமிழ்நாடு அரசு தனது 40 சதவீத பங்காக ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கினால் தான் விபி ஜி ராம் ஜி திட்டப்பணிகளை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

* நிதி ஒதுக்கீடு விவரம்
1. உத்தரப்பிரதேசம் ரூ.9,721.48 கோடி
2. மேற்கு வங்கம் ரூ.8,508 கோடி
3. தமிழ்நாடு ரூ.7,585.49 கோடி
4. ராஜஸ்தான் ரூ.7,581.87 கோடி
5. ஆந்திரா ரூ.7,707.21 கோடி
6. பீகார் ரூ.6,715.83 கோடி

Tags : Tamil Nadu ,UP ,West Bengal ,New Delhi ,Union government ,Former ,Prime Minister… ,
× RELATED மம்தா பானர்ஜி வீட்டில் சோதனை...