×

ஜம்மு காஷ்மீர்- லடாக்கை இணைக்கும் சோஜிலா சுரங்க பாதை பணிகள் நிறைவு

மின்னிமார்க்: காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும், நாட்டின் மிகவும் உயரமான மலை உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான, முக்கியத்துவம் வாய்ந்த சோஜிலா சுரங்கப்பாதை பணிகள் நேற்று நிறைவு பெற்றது. இமயமலையில் 11,578 அடி உயரத்தில் கட்டப்பட்ட 13.153 கி.மீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, முக்கியமான ஸ்ரீநகர்-கார்கில்-லே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

ஆண்டு முழுவதும் இணைப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, ஒவ்வொரு குளிர்காலத்திலும் பல மாதங்களுக்கு லடாக்கின் இணைப்பைத் துண்டிக்கும், பனிச்சரிவு அபாயம் நிறைந்த சோஜிலா கணவாயைத் தவிர்த்துச் செல்கிறது. தற்போதைய பயண நேரத்தை 1.5 மணி நேரத்திலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கும் உலகின் மிக நீளமான ஒற்றைக் குழாய் இருவழிப் பாதையாகும். காஷ்மீர்- லடாக்கை இணைக்கும் சோஜிலா சுரங்க பாதை பணிகள் நேற்று நிறைவு பெற்றது.

சுரங்க பாதையின் கடைசி 2. 5 மீட்டர் நேற்று வெடிவைத்து தகர்த்ததன் மூலம், இமயமலை வழியாகச் செல்லும் இந்த உயரமான உள்கட்டமைப்புத் திட்டம் நிறைவடைவதை நோக்கிய ஒரு முக்கியபடியை எட்டியுள்ளது. சோஜிலா சுரங்க பாதையின் பணிகள் நிறைவு பெற்றுள்ளதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் லடாக்கிற்கும் இடையே அனைத்துப் பருவங்களிலும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டு கால கனவை நனவாக்கியுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலவரப்படி, மொத்தப் பணிகளில் சுமார் 85 % நிறைவடைந்துள்ளது. இந்தச் சுரங்கப்பாதை 2028 பிப்ரவரியில் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.

Tags : Zojila Tunnel ,Jammu Kashmir ,Ladakh ,Kashmir ,Himalayas ,
× RELATED மம்தா பானர்ஜி வீட்டில் சோதனை...