புதுடெல்லி: பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பதவி ஏற்றார். அதை தொடர்ந்து இன்று வரை பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார். 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேரு பதவியில் இருந்த 4,399 நாட்கள் என்ற சாதனையை பிரதமர் மோடி இன்று கடக்கவுள்ளார். 1947 முதல் 1952 வரை நேரு பிரதமர் பதவி வகித்தாலும், தேர்தல் மூலம் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
ஏனெனில் 1952 வரை பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மோடியை விட நீண்ட காலம், அதாவது 14 ஆண்டுகள் பதவியில் இருந்தாலும், அவரது பிரதமர் பதவிக்காலம் தொடர்ச்சியானதாக இருக்கவில்லை. எனவே நேரு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பிரதமராக இருந்த 4,399 நாட்கள் என்ற சாதனையை முறியடிப்பதன் மூலம், இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற சாதனையை மோடி இன்று படைக்க உள்ளார்.
மேலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையும் கொண்டாடும் வகையில் டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. இதில் தேஜ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ உயர்மட்டத் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
* உலகத் தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகத் தலைவர்கள் பலரிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் வந்துள்ளன. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க: இலங்கை அரசாங்கத்தின் மற்றும் மக்களின் சார்பில் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இந்த மைல்கல் நீங்கள் பதவியில் இருந்த ஆண்டுகளை மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்திருக்கும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை பிரதமர் மோடி ஆட்சி ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை இலங்கையைத் தாண்டி பல நாடுகளிலும் உள்ளவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே: பிரதமர் மோடி ஒரு முன்மாதிரி மற்றும் தலைமைத்துவத்திற்கான எடுத்துக்காட்டு. 20 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டு நல்ல வாழ்க்கைக்கு இட்டுச் சென்றது ஒரு அற்புதமான சாதனையாகும். டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர் கமலா பெர்சாட்-பிசெசார்: பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா உலகளாவிய விவகாரங்களில் ஒரு முக்கிய குரலாக உருவெடுத்துள்ளது. எளிய பின்னணியிலிருந்து தொடங்கி, 140 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டை தொடர்ந்து 3 தேர்தல்களின் வென்று வழிநடத்திச் சென்றுள்ளார்.
