×

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸியை பொட்டி பாம்பாக அடக்கிய வங்க புலிகள்: 21 ஆண்டுகளுக்கு பின் வென்று வரலாற்று சாதனை

டாக்கா: ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 284 ரன்களைக் குவித்தது. நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 67 ரன்னும், தன்ஜித் ஹசன் தமிம் 54 ரன்னும் எடுத்தனர். தவ்ஹித் ஹிருடோய் 31 ரன்னில் அவுட்டானார்.

அதிரடியாக ஆடிய மொசாடெக் ஹொசைன் 70 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டும், லியாம் ஸ்காட், மேட் ரென்ஷா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் முதல் பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். லபுசேன் ஒரு ரன்னில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி 47 ரன்னிலும், கூப்பர் கானலி 35 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேமரூன் கிரீன் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 42.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் வங்கதேச அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வங்கதேசம் புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Tags : Bengal Tigers ,Aussies ,Dhaka ,Bangladesh ,T20 ,Australia ,
× RELATED ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட்டில் அபாரம்;...