மெக்சிகோ: உலகிலேயே கிரிக்கெட்டையும் தாண்டி அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டு தொடர் பிபா கால்பந்து உலகக்கோப்பை. இதற்கு முன்னர் வரை உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒரு குரூப்பில் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடர் ஜூன் 11ம் தேதி துவங்கி ஜூலை 19 வரை என 39 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு உலககோப்பையை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. 3 நாடுகளில் 16 நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இம்முறை தொடரில் பல்வேறு மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதி போட்டிகளில் 4 முறை உலகக்கோப்பையை முத்தமிட்ட இத்தாலி அணி வாய்ப்பை இழந்தது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேநேரம் உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும், பலருக்கு பெயரே தெரியாத கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகளும் முதல்முறையாக இந்த முறை கால்பந்து உலககோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 12 முதல் ஜூன் 27 வரை நடைபெறுகிறது. நாக் அவுட் சுற்றான ரவுண்ட் அப் சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது.
அதன்பிறகு காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11 வரையில் நடைபெறுகிறது. இறுதி ேபாட்டி ஜூலை 19ம் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது. நாளை மெக்சிகோவில் நடக்கும் முதல் போட்டியில் மெக்சிகோ- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 12.30 மணிக்கு துவங்குகிறது. காலை 7.30 மணிக்கு மெக்சிகோவில் நடக்கும் தென் கொரியா, செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.
