×

முதல்வர் தொகுதி பெரம்பூர் உள்பட சென்னையில் பல இடங்களில் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு, முற்றுகை; பொதுமக்கள் மறியல்: இரவு பொழுதை சாலைகளிலேயே கழிக்கும் அவலம்

சென்னை: முதல்வர் தொகுதியான பெரம்பூர் மற்றும் பொன்னேரி, ஆரணி, ஆவடி, அம்பத்தூர், மாங்காடு, ஆலந்தூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவில் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சில இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு பொழுதை சாலைகளிலும், மின்வாரிய அலுவலகங்களிலும் கழிக்கும் அவலத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நேற்று முன்தினம் பல இடங்களில் போராட்டம் நடந்தது. அதன் விவரம்: தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மின்வெட்டு பிரச்னையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் இரவில் ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ந்து மின் வெட்டு பிரச்னை ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல், மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பலர் மின்வாரிய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு எங்களது பகுதியில் மின்சாரம் வந்ததால் தான் இங்கிருந்து செல்வோம் எனக்கூறி இரவுப் பொழுதை மின்வாரிய அலுவலகங்களில் கழித்து வருகின்றனர்.

நேற்று முன்தினமும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியில் இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின்தடை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் சத்தியமூர்த்தி நகர் மல்லிப்பூ காலனி சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் 52வது பிளாக் முதல் 64வது பிளாக் வரை உள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.

இவ்வாறு தொடர்ந்து முதல்வர் தொகுதியில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதேபோன்று, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 1வது பிளாக் முதல் 4வது பிளாக் வரை நேற்று முன்தினம் இரவு மின்சாரம் இல்லாததால் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் கண்ணதாசன் நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் மின் வாரிய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி: ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர் எஸ்.வி.நகர், விஜயலட்சுமிபுரம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், கொரட்டூர், பானு நகர், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் செய்தபோது முறையான பதில் இல்லை. தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், திருநின்றவூரில் மின்சார அலுவலகத்தை பூட்டி 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பத்தூர்: அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மின்வெட்டு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அம்பத்தூர்-செங்குன்றம் சாலை கள்ளிகுப்பம் மின்சார அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸை போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினர். தகவலறிந்து புதூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சமாதானம் ஏற்படாததால் கள்ளிகுப்பம் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் கழித்து மின்சாரம் வழங்கப்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர். ஆரணி: பெரியபாளையம் அடுத்த ஆரணி பேரூராட்சியில் சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் மின்வெட்டு ஏற்பட்டதால் ஆரணி பஜாரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மின் தடையை தவிர்த்திடும் வகையில் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பொன்னேரி: மீஞ்சூரில் இரவு நேரத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் கடத்த சில வாரங்களாக மக்கள் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார் அளிக்க மின் அலுவலகத்திற்கு சென்றால் பணியாளர்கள் இருப்பதில்லை. பொறியாளரை தொடர்பு கொண்டால், அதிக மின்னழுத்தம் காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது, அதை சரி செய்யும் பணி நடக்கிறது என பதில் வருகிறது.

கடந்த வாரம் அதிக மின்னழுத்தத்தால் மீஞ்சூரில் ஒரு பகுதியில் வீடுகளில் உள்ள மின் இணைப்புகள் முழுவதும் வெடித்து சிதறியது. மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது. இதுபற்றி கேட்டால் அதிகாரிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்திலிருந்து கிராம பகுதிகளான ஆத்துப்பக்கம், தேர்வழி, வழுதலம்பேடு, சோழியம்பாக்கம், ஏனாதி மேல்பாக்கம், குருவாட்டுசேரி, மங்காவரம், ரெட்டம்பேடு ஆகிய பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைபடுவதும், மின்னழுத்தம் ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது.

நேற்று முன்தினம் ஆத்துப்பாக்கம் கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. மேலும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதானது. மின்சாரம் இல்லாததால் குழந்தைகள், முதியோர் தூக்கமின்றி பரிதவித்தனர். பல்லாவரம்: மாங்காடு, ரகுநாதபுரம், சீனிவாசா நகர், சிக்கராயபுரம், இந்திரா நகர், ஜனனி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உயரழுத்த மின்சாரம் காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டது.

மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொள்வதும், நேரடியாக வந்து புகார் கொடுப்பதுமாக இருந்தது. ஆனால் யாரும் சரியான பதிலளிக்கவில்லை. அதனால் மாங்காடு துணை மின் நிலைய அலுவலகம் முன் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மின்வெட்டால் மாங்காடு நகரமே இருளில் மூழ்கியது.

ஆலந்தூர்: ஆலந்தூர் அப்பாவு தெரு, மடுவின் கரை, சவுரி தெரு, மாதவபுரம், தர்மராஜா கோயில் தெரு, உசேன் சுபேதா தெரு, ஜால் தெரு, பாண்டு பீமன் தெரு, ஏகாம்பர் டபேதார் தெரு, வேதகிரி தெரு, கற்பக விநாயகர் கோயில் தெரு, முக்தம்ஜி தெரு, கொத்தவால் தெரு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து 4 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டிருந்தது. இதில் அப்பாவு தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள வயர் தீப்பற்றி எரிந்தது.

நங்கநல்லூர் பகுதிக்குட்பட்ட டிடிசி காலனி, லட்சுமி நகர் போன்ற பகுதியில் 3 மணி நேரம் மின்சாரமும், முகலிவாக்கம் பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர், குமுதம் நகர், ஸ்ரீகார்டன் பகுதி, இந்திரா கார்டன் பகுதி, ராஜேஸ்வரி நகர் போன்ற பகுதிகளில் பல மணிநேரமும் மின்சாரம் தடைபட்டது. இதுபற்றி மின்வாரிய ஊழியர்களை மக்கள் தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. மடிப்பாக்கம் ராம் நகர், தந்தை பெரியார் நகர், கோவிந்தசாமி நகர், எல்ஐசி நகர் போன்ற பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணி முதல் 12.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரமாக மின்சாரம் வராததால் வெப்ப தாக்கத்திலும், கொசுக்கடியிலும் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். மின்வாரிய அதிகாரிகள், இது எங்களுடைய பிரச்னை இல்லை என்று அலட்சியமாக கூறியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இரவு 12.30 மணியளவில் இசிஆரில் மறியலில் ஈடுபட்டனர்.

அதனால், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் வெகு தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நாள்தோறும் மின்துண்டிப்பு நீடிப்பதாகவும், குழந்தைகள், பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் மிகவும் அலட்சியமாக பேசி வருவதாகவும் அப்பகுதி மக்கள் காவதுறையிடம் குற்றம்சாட்டி முறையிட்டனர். இதுகுறித்து உரிய அதிகாரகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

* மின்தடையால் பள்ளிகள் விடுமுறை
பெரம்பூரில் நேற்றும் 2 இடங்களில் மின்வெட்டு பிரச்னையால் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டிரான்ஸ்பார்மர் சரி செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்பதால் அப்பகுதியில் செயல்பட்டு வந்த செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் டான் போஸ்கோ பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ஊழியர்
மாங்காடு அடுத்த சீனிவாசா நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய மின்வாரிய ஊழியர் விக்ரம் என்பவர் ஏறிய போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* தொடர்ந்து தீப்பற்றி எரியும் டிரான்ஸ்பார்மர்கள்
ஓட்டேரி – குன்னூர் நெடுஞ்சாலை பொடி கடை பேருந்து நிலையம் அருகே நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது. அதேபோல், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் 18வது மேற்கு குறுக்கு தெரு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் அங்கிருந்து டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர். அப்போது டிரான்ஸ்பார்மர் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் நின்றிருந்த ஆட்டோவும் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் டிரான்ஸ்பார்மர் அருகில் இருந்த அஷ்ரப் என்பவரின் வீட்டில் இருந்த சில பொருட்களும் தீயில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இரவு முழுவதும் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். ஆலந்தூர் அப்பாவு தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள மின் வயர் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து கவுன்சிலர் பிருந்தா ஸ்ரீ முரளிகிருஷ்ணன் மின்வாரிய பொறியாளருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் உடனடியாக தீ அணைக்கப்பட்டது.

* அமைச்சர் கூட்டத்தில் திடீர் மின்வெட்டு
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் மேலாண்மை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை 10.15 மணியளவில் நடந்தது. மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜகான் தலைமை வகித்தார். எம்பி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டம் துவங்கியதும் கலெக்டர் பிரவீன்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 10.45 மணியளவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. 10 நிமிடத்திற்கு பின்னர் ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை வழங்கப்பட்டது. இதன் பின்னர் மின் விநியோகம் சீரானது.

Tags : Chennai ,Perambur ,Electricity Board ,Ponneri ,Arani ,Avadi ,Ambattur ,Mangadu ,Alandur ,Kottivakam ,
× RELATED “உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு...