500 போலீசார், அதிகாரிகள் இணைந்து குமரி முழுவதும் குட்கா ரெய்டு: 5 ஆயிரம் கடைகளுக்கு மேல் சோதனை

 

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் குட்கா ரெய்டு நடந்து வருகிறது. 500 போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் குட்கா, புகையிலை விற்பனை மீண்டும் அதிகரித்து உள்ளன. போலீசார் அவ்வப்போது நடவடிக்கை மேற்ெகாண்டாலும் சமீப காலமாக இதன் விற்பனை அதிகளவில் உள்ள எஸ்.பி. ஸ்டாலினுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் பேரில் இன்று காலை காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கொண்ட குழு திடீரென மாவட்டம் முழுவதும் அதிரடி ரெய்டில் இறங்கினர்.

நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய 5 துணை போலீஸ் சரக பகுதிகளில் உள்ள 33 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. பலசரக்கு கடைகள், ெபட்டிகடைகள், டீ கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது. காலை 11 மணி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடைபெற்று முடிந்ததாக அதிகாரிகள் கூறினர். 2 ஏடிஎஸ்பிக்கள், 5 டி.எஸ்.பி.க்கள், 23 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ.க்கள், 500 போலீசார் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயராம பாண்டியன், ரவி, சந்திரசேகர், பிரவீன், சங்கர நாராயணன் ஆகியோர் சோதனையில் பங்கேற்றனர். காலை 8 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கடைகள் திறந்ததும் உடனடியாக போலீசார் சோதனை மேற்கொள்கிறார்கள். பூட்டி இருந்த கடைகள் முன் காத்திருந்து கடைகள் திறந்ததும் சோதனை நடந்தது. நகர்ப்புற பகுதிகள், கிராமப்புற பகுதிகள் என அனைத்து கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகள், மருத்துவமனைகள் அருகில் உள்ள கடைகளிலும் சோதனை நடந்து வருகின்றன. ஒட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் நடந்துள்ள சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: