அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தகவல்

தூத்துக்குடி, மார்ச் 7: அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி எஸ்பி ெஜயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்டத்தில் எனது உத்தரவுப்படி காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த இரண்டு மாதங்களில் 37 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். 107, 109 மற்றும் 110குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி 1280 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடக்கூடாத வகையிலான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  116 பேர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 536பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். இவர்களில் 441 பேர் தங்களது துப்பாக்கிகளை தங்கள் பகுதிகளிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சரண்டர் செய்துள்ளனர். இதில் 65 பேர் அரசாங்கத்தால் விதிவிலக்கு பெற்றவர்களாவர்.

மீதமுள்ளவர்கள் சரண்டர் செய்யாத 30 துப்பாக்கிகளையும் உடனடியாக சரண்டர் செய்திடவேண்டும். தேர்தல் நாள் அன்று எவ்வித இடையூறும் இல்லாமல், அச்சமின்றி நேர்மையான முறையில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க எனது உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினர், ஆயுதப்படையினர், ஊர் காவல்துறையினர் என 200பேர் கொண்ட கொடி அணி வகுப்பானது பதற்றம் நிறைந்த பகுதிகளான தூத்துக்குடி, ஆத்தூர், ஆறுமுகநேரி, வைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி மற்றும் கோவில்பட்டி போன்ற இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, வாக்களிப்பதற்காக பணமாகவோ, பொருளாகவோ பெற்றாலோ, கொடுத்தாலோ அது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: