கருங்குளத்தில் லாரி மீது மோதி அரசு பஸ் கவிழ்ந்தது

செய்துங்கநல்லூர், மார்ச் 7: கருங்குளத்தில் லாரி மீது மோதிய அரசு பஸ் வாழை தோட்டத்துக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். திருச்செந்தூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ், 40 பயணிகளுடன் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. வைகுண்டம் அடுத்துள்ள கருங்குளம் பகுதியில் காலை 10 மணியளவில் வந்து கொண்டிருந்த போது பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக வயல்வெளிகளில் மணல் கொட்டி கொண்டிருந்த லாரி திடீரென சாலையின் குறுக்கே வந்தது. இதனால் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பஸ்சை திருப்பியபோது லாரியின் பக்கவாட்டில் இடித்து எதிர்பாராதவிதமாக சாலையோர வாழை தோட்டத்திற்குள் அரசு பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்த செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த பஸ்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அவ்வழியாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் போலீசார், விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியதுடன் போக்குவரத்தையும் சீரமைத்தனர். விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியை காப்பாற்றிய தாசில்தார்: கருங்குளத்தில் அரசு பஸ் வயலில் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த வல்லநாட்டை சேர்ந்த ஜானகி (65) என்பவர் பேச்சுமூச்சின்றி மயக்கமடைந்த நிலையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், மூதாட்டி நிலையறிந்து தனது ஜீப்பில் அவரை ஏற்றி கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தார். உடனடியாக டாக்டர்கள் ஜானகிக்கு சிகிச்சை அளித்ததால் அவர் தற்போது நலமுடன் உள்ளார்.

Related Stories: