சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை 46 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 வழக்குகள் பதிவு செய்து 64 பேர் மீது வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் சார் பதிவாளர் அலுவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அரசு துறைகளில் லஞ்சத்தை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான கூடுதல் டிஜிபி அருண் உத்தரவுப்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று முகூர்த்த நாள் என்பதால் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அன்றைய நாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் தலைமையில் 320 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், வேலூர் உட்பட 38 மாவட்டங்களில் உள்ள 46 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.37 லட்சத்து 75 ஆயிரத்து 650 பணம் கைப்பற்றப்பட்டது.
குறிப்பாக அதிகபட்சமாக திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3,22,100ம், சேலம் கிழக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3,18,700ம், திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம், சென்னை விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2,07,300ம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சில சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்தறை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 64 பேர் மீது 10 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை எற்படுத்தியுள்ளது.
