தருவைகுளம் கடல் பகுதியில் மீன்பாடு மந்தம்

குளத்தூர், மார்ச் 7: தருவைகுளம் கடல் பகுதியில் மீன்பாடு மந்தமாக உள்ளதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள தருவைகுளம் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே மீன்பாடுகள் படுமந்தமாகவே உள்ளது. பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வெறும் வலையுடன் ஏமாற்றத்துடனே கரை திரும்பி வருகின்றனர். காற்றின் வேகம் கடல் பகுதியில் அதிகமாகவே காணப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக அமைதியாக காணப்படுகிறது. மேலும் தங்குகடல் சென்ற விசைப்படகு மீனவர்கள் ஒன்றிரண்டாக கரை திரும்பி வருகின்றனர் இதில் சூறை, ஐலெஸ், கட்டா, பச்சைகளிங்கன் முறல், வாலமுறல், கருப்புகளிங்கன் முறல், ஊளி, மயில் போன்ற குறைந்த அளவிலான மீன்களே வரத்திருந்தது. முறல் வகை மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. முறல் வகை மீன்கள் கிலோ ரூ.250 முதல் ரூ.280 வரை ஏலம் போனது. ஐலெஸ், கட்டா, மயில் ரூ.150க்கு விற்பனையானது. ஊளி ரூ.260க்கு விற்பனையானது. இதுகுறித்து மீன் வியாபாரி மனோகரன் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே கடல் பகுதியில் மாறி மாறி ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் மீன்பாடுகள் வரத்தில்லாமல்  உள்ளது. அடுத்த மாதம் மீன்பிடி தடைகாலம் துவங்கவிருக்கும் நிலையில் தற்போது மீன்பாடுகளும் இன்றி வியாபாரமும் சுமாராக இருப்பது வேதனையாக உள்ளது. மேலும் இன்னும் சில வாரங்களே விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க முடியும். இதில் வரும் மீன்பாடுகளை பொருத்தே மீன்கள் விலையில் மாற்றம் ஏற்படும்’ என்றார்.

Related Stories: