திருவெறும்பூர்: திருச்சியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மகபூபாஷா. இவரது மகன் பாதுஷா(24). பிரபல ரவுடியான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டூர் ஆயில் மில் செக்போஸ்ட் காமராஜர் நகரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மனைவி பாத்திமா பீவி(22) அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில், பாதுஷாவுக்கு அரியமங்கலம் காந்திஜி நகரை சேர்ந்த சூர்யாவின்(22) அக்கா பவானியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதனால் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதுஷாவை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று சூர்யா, குமார்(எ)சந்திரகுமார்(26), பிரசாத்(29), தீபக்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சூர்யா போலீசிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு: எனது அக்கா பவானியுடன் பாதுஷாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளத்தொடர்பை முறித்துக்கொள்ளும்படி பாதுஷாவிடம் சொன்னேன்.
ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் பாதுஷாவை கொலை செய்ய முடிவு செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது பாதுஷா தப்பி விட்டார். ஆனாலும் அரிவாள் வெட்டில் அவரது வலது கையில் 2 விரல்கள் துண்டானது. அதன்பிறகும் எனது அக்காவுடன் கள்ளத்தொடர்பை பாதுஷா நிறுத்தவில்லை. மேலும் அவர் ரவுடி என்பதால், என்னை தீர்த்துக்கட்டி விடுவார் என்று நினைத்து அவரை எப்படியாது கொன்று விட நினைத்தேன். அதன்படி எனது நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினேன் என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
