நெல்லையில் துவக்கம் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

நெல்லை, மார்ச் 7: சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளில் 27 போலீசார் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 கொரோனா  வைரசுக்கு தடுப்பூசி முன் களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக   போடப்பட்டது.  இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அரசு அதிகாரிகளுக்கு  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள்,  ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கியது.  கொக்கிரகுளம்  நகர்ப்புற  சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ரஞ்சித்குமார், ஆர்த்தி ஆகியோர்  தலைமையில் நர்ஸ்கள்  சரண்யா,  மென்டா, புஷ்பமலர், நகர்ப்புற சுகாதார செவிலியர் தனலெட்சுமி, டேட்டா என்ட்ரி   ஆபரேட்டர் சோனியா அடங்கிய குழுவினர்  கலெக்டர் அலுவலக   ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.

 முதல் நாளன்று 76 பேரும்,  2ம் நாளன்று 70 பேரும், 3ம் நாளன்று 33 பேரும், வியாழக்கிழமை 10 பேரும், வெள்ளிக்கிழமை 25 பேரும் என 214 பேர் 5 நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்கு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தேர்தல் பணிக்கு செல்லும் அலுவலர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் தேர்தல் பணிக்கு செல்லும் போலீசாருக்கும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. நேற்று மட்டும் 27 போலீசார் உட்பட 36 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வரும் நாட்களில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாநகரட்சி ஆணையாளர் கண்ணனுக்கு, மாநகர நகர்நல அலுவலரான டாக்டர்  சரோஜா முன்னிலையில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனிடையே தமிழக  பாஜ மாநில துணைத்தலைவரும், மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன்,  நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி

நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிஇஓ சிவக்குமார், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறையினர் அனைவருக்கும் இன்று (7ம் தேதி) தடுப்பூசி  போடப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் நெல்லை மாவட்ட கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், அவரது நேர்முக உதவியாளர் டைட்டஸ் உள்ளிட்டோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (6ம் தேதி) தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். பின்னர் சிஇஓ சிவக்குமார் கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று (7ம் தேதி) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, அனைவரும் இன்று தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதற்காக தங்களது இருப்பிடம் அருகேயுள்ள அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்ெகாள்ளலாம்’’ என்றார். மாநகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு, மாநகர நகர்நல அலுவலரான டாக்டர் சரோஜா முன்னிலையில் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனிடையே தமிழக பாஜ மாநில துணைத்தலைவரும், மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன், நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

Related Stories: