×

எஸ்.ஐ. மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கணவன், மனைவி கைது

 

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பண மோசடி வழக்கில் விசாரணைக்கு சென்ற போலீசார் மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கணவன், மனைவி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் சிராயன்விளை பகுதியை சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ் ராஜ் (31). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சித்தி மகள் கிருஷ்ணவேணி (25). இவர் தனது கணவர் நாகசுமன் (26) என்பவருடன் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை தேவர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். கிரேட் பிரின்ஸ் ராஜ், அடிக்கடி தனது சித்தி மகள் கிருஷ்ணவேணியை பார்க்க வருவார். இந்தநிலையில் கிரேட் பிரின்ஸ் ராஜ் ஜவுளிக்கடை வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டது.

இது பற்றி அறிந்த கிருஷ்ணவேணி, கிரேட் பிரின்ஸ் ராஜீடம் தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என்றும், உனது மாமனார் சொத்தை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு எனது கணவர் நீதிமன்ற மூலம் வாங்கித் தருவார் என்றும் கூறினார். இதற்காக கிரேட் பிரின்ஸ் ராஜிடம், ரூ. 5 லட்சத்து 93 ஆயிரத்து 390 பணம் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புடைய சொகுசு கார் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் போடாமல் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த கிரேட் பிரின்ஸ் ராஜ் விசாரித்த போது, நாகசுமன் வழக்கறிஞரே இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் கிருஷ்ணவேணி மற்றும் நாகசுமனிடம் இது சம்பந்தமாக கேட்டபோது, கிரேட் பிரின்ஸ் ராஜை மிரட்டியதுடன் பணம் தர முடியாது என தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கிரேட் பிரின்ஸ் ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிரேட் பிரின்ஸ் ராஜிடம் இருந்து பறிக்கப்பட்ட காரை முதலில் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் போலீஸ் தேடி வந்த நாகசுமன், அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர், தோவாளையில் வீட்டில் இருப்பதாக நேற்று மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப் இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். வீட்டிற்கு சென்ற போலீசார் நாகசுமனை கைது செய்ய முயன்ற போது, நாகசுமன் வீட்டிற்குள் சென்று தப்பிக்க முயன்றார்.

அவரது மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், தகாத வார்த்தையால் திட்டினார். மேலும் போலீசார் மீது கிருஷ்ணவேணி, தன்னுடைய நாயை ஏவி உள்ளார். அந்த நாய் சப் இன்ஸ்பெக்டர் அனுஜனை திடீரென கடித்தது. இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கணவன், மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் உடல் நிலை சரியில்லை என கூறியதால், இருவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மருத்துவ பரிசோதனைக்கு பின், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, நாயை ஏவி விட்டு அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நாகசுமன் மீது மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர் , நீலகிரி மாவட்டம் ஊட்டி, நெல்லை நாங்குநேரி , திருப்பூர் மடத்துக்குளம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பண மோசடி வழக்கில் தம்பதியை பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் மீது மீது நாயை ஏவி கடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nagercoil ,Thovalai, Kanyakumari district ,Sirayanvilai, West Neyyur, Kanyakumari district ,
× RELATED தமிழ்நாட்டில் நெல்லை, கோவை,...