முதல்முறை வாக்காளர்களுக்கு பயிற்சி எந்த சின்னத்தில் வாக்கு விழுகிறது விவிபேட் இயந்திரம் மூலம் செயல்விளக்கம்

நெல்லை, மார்ச் 7: எந்த சின்னத்தில் வாக்கு விழுகிறது என முதல்முறை வாக்காளர்களுக்கு விவிபேட் இயந்திரம் மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நெல்லை  கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தலின் பேரில் பாளை தூய யோவான் கல்லூரியில்  முதல்முறை வாக்காளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பயிலரங்கு நடந்தது.  நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளியல் துறை  பேராசிரியர் கதிரவன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜான் கென்னடி கருத்தரங்கை துவக்கிவைத்துப் பேசினார். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தேர்தல் வாக்குப்பதிவின் போது 100 சதவீதம்  வாக்களிப்பது குறித்தும், மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தும்  பேசினார். மேலும் இதையொட்டி நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், வாக்காளர்களின் உரிமை, கடமைகளை விளக்கினார். மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது வாக்குப்பதிவு  இயந்திரம் மற்றும் வாக்காளர் சரி பார்க்கும் காகித தணிக்கை இயந்திரத்தின்  செயல்விளக்கம் குறித்து விளக்கினார்.

மாணவ, மாணவிகள் யாருக்கு  வாக்களித்தோம் என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளும்  வகையில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி  செய்தி மக்கள்  தொடர்பு துறை இணை இயக்குநர் அண்ணா, நகர்நல அலுவலர் டாக்டர்  சரோஜா, உதவி ஆணையர்கள் பாளை. பிரேம் ஆனந்த், தச்சை ஐயப்பன்,  பாளை.  தாசில்தார் செல்வன், வாக்காளர் விழிப்புணர்வு வட்ட பொறுப்பாளர் தாசில்தார்  கோமதி சங்கரநாராயணன், கூடுதல் துணை தாசில்தார் பழனி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பயிலரங்கில் நல் நூலகர் முத்துகிருஷ்ணன் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க  மாணவ, மாணவிகள் திரும்ப வாசித்து ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து வாக்குப்பதிவு விழிப்புணர்வு  குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. பெட்காட் மாநகர செயலாளர் முத்துசுவாமி நன்றி  கூறினார்.  ஏற்பாடுகளை துணை கலெக்டர் (பயிற்சி) மகாலெட்சுமி மற்றும் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: