தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளிநாடு திரும்பியவர்கள் குறித்த விசாரணை தீவிரம்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கள்ளஓட்டு போட்டுவிட்டு வெளிநாடு திரும்பியவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களின் தரவுகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர் வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நிரூபிக்கும் வகையில், விமான நிலையங்களில் கை விரலில் கருப்பு மையுடன் வெளிநாடு திரும்பும்போது சிலர் சிக்கினார்.

இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டிற்கு வந்து, வாக்குப்பதிவுக்கு பின் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியேறிய வெளிநாட்டினர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒன்றிய மாநில விசாரணை அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கள்ள ஒட்டு போட்ட விவகாரத்தில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கள்ள ஒட்டு போட்டுவிட்டு வெளிநாடு தப்பி சென்றுள்ளவர்களை அடையாளம் காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில், குடிவரவுப் பணியகத்தின் உதவியை புலனாய்வு அதிகாரிகள் நாடியுள்ளனர். தேர்தலில் வாக்களித்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர் குறித்த தரவுகளைப் பெறுவதற்காக ஒன்றிய மற்றும் மாநில சட்ட அமலாக்க அமைப்புகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. வாக்களித்தவர்களின் சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் காணொளிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வெளிநாடு குடியுரிமை பெற்றுவிட்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்திருந்தால் அது மோசடி என்றும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை மீறுவதாக அமையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறப்புத் தீவிர மறுஆய்வின்போது வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்கள் என் நீக்கப்படவில்லை என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு வாக்காளர் இந்தியாவில் வசிப்பதாகத் தவறாகக் காட்டப்பட்டால், அந்தத் தவறான அறிவிப்பை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மோசடியான வாக்குப்பதிவுக்கு வழக்குத் தொடரப்படுவதுடன், தேர்தலில் வாக்களித்ததாகக் கண்டறியப்பட்ட வெளிநாட்டினரின் வெளிநாட்டு இந்தியக் குடிமக்கள் அட்டைகளும் ரத்து செய்யப்படலாம் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: