சென்னை: தவெக ஆட்சியில் மக்கள் தான் களைத்து போயுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தங்கம் தென்னரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சைத் திரித்துப் பரப்புகிறார்கள் என்று சாடியுள்ளார்.
விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ஆட்சி கலைப்பு – கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல; மக்கள் தான் களைத்துப் போய்விட்டார்கள்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.
ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.
இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம் என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் தான் அவர் விமர்சனம் செய்தார். “6 மாதம் அல்ல, 3 மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய் கொண்டு இருக்கிறது” என்றே மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் பேசியதாக திரித்து செய்தி பரப்பப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று கூறி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!
“6 மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்ற அர்த்தத்தில் தான் பேசினார்.
ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளை தான் மக்கள் சொல்லி வருகிறார்கள். இதைத்தான் திமுக தலைவர் தனது பேச்சில் சுட்டிக் காட்டினார். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்! என்று தங்கம் தென்னரசு கூறி இருக்கிறார்.
