×

பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் திருட்டு

திண்டுக்கல்: பழனி இடும்பன் கோயிலில் 142 கிராம் தங்கம் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் திருடப்பட்டது. கோயிலில் இருப்புகளை சரிபார்த்தபோது தங்கம், வெள்ளி திருடப்பட்டது தெரியவந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த கோயில் செயல் அலுவலர், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இடும்பன் கோயில் இயங்கி வருகிறது. மலையடிவாரத்தில் கோயிலின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களும், காவடி சுமத்து வரும் பக்தர்களும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இடும்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு மலைக்கோயிலுக்கு செல்வது வழக்கம்.

மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதியளவில் இடும்பன் கோயிலுக்கு செல்வதுண்டு. பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துவர். இவை அனைத்திற்கும் செயல் அலுவலர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக இருந்த விமலா என்பவர் வேறு அரசு பணி கிடைத்ததால் அப்பணியில் சேர்ந்துள்ளார். தற்போது இடும்பன் கோயிலுக்கு நரசிம்மன் என்பவர் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரசிம்மன் பொறுப்பிற்கு வந்தபோது பதிவேட்டில் உள்ள நகைக்கும், தற்போது கோயிலுள்ள நகைக்கும் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. தங்கம் 142 கிராம் குறைவாகவும், வெள்ளி 52 கிராம் குறைவாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து செயல் அலுவலர் நரசிம்மன் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பழனி நகர காவல்நிலையத்தில் தங்கம், வெள்ளி பொருட்கள் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Palani Idumban ,Temple ,Palani ,Idumpan ,
× RELATED விமர்சனங்களை முடக்குவதில் மட்டுமே தவெக அரசு தீவிரம் காட்டுகிறது – திமுக