மீஞ்சூர் அருகே விவசாய நிலத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்: சாலையோரம் நிறுவ ரூ.7 லட்சம் கேட்கும் மின் ஊழியர்கள்

பொன்னேரி: மீஞ்சூர் அருகே விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து, மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. புதிய மின்கம்பங்களை சாலையோரம் நிறுவ மின் ஊழியர்கள் ரூ.7 லட்சம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் அதிகளவில் நெல் பயிடப்பட்டு தற்போது அறுவடை நிலையில் உள்ளது. இந்த விவசாய நிலங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக மீஞ்சூர் அடுத்த மேலூரிலிருந்து உயர் மின்னழுத்த வயர்கள், நாலூர் வழியாக வண்ணிப்பாக்கம், முரிச்சம்பேடு, மேட்டுப்பாளையம், இலவம்பேடு, அண்ணா நகர், சிறுவாக்கம், அனுப்பம்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்குள்ள மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து மிகவும் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளன. மேலும் இந்த மின்கம்பம் வழியாக செல்லும் மின்கம்பிகள் கைக்கு எட்டும் வகையில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விவசாயிகள் உழவு பணி மற்றும் அறுவடை பணிகளில் ஈடுபட முடியாமல் அச்சமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பொதுமக்களின் தொடர் புகார்களை தொடர்ந்து. இப்பகுதியில் மிகவும் சேதமான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக புதிய அமைப்பதற்காக மின்வாரியம் சார்பில் 7 மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் நட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்த புதிய மின்கம்பங்களை இன்னும் நடாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், `இப்பகுதியில் நடுவதற்கு 7 புதிய மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றை சாலையோரம் நடுவதற்கு ஒரு மின்கம்பத்திற்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் செலவாகும், அதனை நீங்கள் கொடுத்தால் நாங்கள் நடுகிறோம் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் எப்படி ரூ.7 லட்சத்தை தயார் செய்ய முடியும்’ என்கின்றனர்.

எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, சாலையோரத்தில் புதிய மின்கம்பங்களை நட வேண்டும். விவசாயிகளுக்கு பாதகமான வகையில் மின்கம்பங்களையோ, மின்கம்பிகளையோ அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: