×

அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமின்

சென்னை: அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸை, சென்னை சைபர் கிரைம் போலீசார் மதுரையில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மதுரை, சூரியா நகர், குடிநீர் வடிகால் வாரிய நகரைச் சேர்ந்தவர் மாரிதாஸ், பிரபல யூடியூபர். பாஜவின் தீவிர ஆதரவாளரான இவர், தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள், அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை, ஏஐ புகைப்படத்துடன் சேர்த்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவருக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களையும், பொய் செய்திகளை பரப்பியதாகவும், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மாரிதாசை கைது செய்வதற்காக, சென்னை சைபர் கிரைம் போலீசார், நேற்று முன்தினம் மதுரை வந்தனர். மதுரை போலீசாரின் உதவியுடன் மாரிதாசின் அன்றாட நடமாட்டத்தை கண்காணித்தனர். அதில், மாரிதாஸ் வேறு எங்கும் செல்லவில்லை.

மதுரையில் தனது வீட்டில் தான் இருக்கிறார் என்பதை சென்னையிலுள்ள உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அப்போது மாரிதாசை உடனடியாக கைது செய்யுங்கள் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும், நேற்று காலை சென்னை சைபர் கிரைம் போலீசார், மாரிதாஸ் வசிக்கும் சூரியா நகர், குடிநீர் வடிகால் வாரிய நகருக்கு சென்றனர். அங்கு மாரிதாஸின் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். பின்னர், காவல் துறை அதிகாரிகள் மாரிதாசின் வீட்டிற்குள் சென்று, சென்னையிலுள்ள வழக்கிற்காக அவரை கைது செய்வதாக கூறி ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சூழலில் தான் இரவு நேரத்தில் மாரிதாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவரை போலீசார் ஆஜர்படுத்தப் போது, விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கினார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸ் விடுவிக்கப்பட்டார். ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிதாஸுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

Tags : Maritas ,Minister ,Kirtana ,Chennai ,Madura ,Chennai Cyber Crime Police ,Madurai ,Suriya Nagar ,Drinking Water Drainage Board ,BAJA ,
× RELATED நாகப்பட்டினம் அருகே கட்டுமான...