திருத்தணி-திருவள்ளூர் இடையே வேகமெடுக்கும் சாலை விரிவாக்க பணி: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருத்தணி: 133 கி.மீ நீளம் கொண்ட சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு- ஆந்திர மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்து மற்றும் வர்த்தக சேவையில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 2 வழி சாலையாக உள்ள இச்சாலையை மேம்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் 6 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் முதல் திருத்தணி அருகே, ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி வரை 44 கிமீ தூரம் கொண்ட 2 வழி தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மேம்படுத்த ரூ.1,376 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2024ல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2026ம் ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை 35 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து மந்தமாக நடைபெற்று வருகிறது. மேலும் விரிவாக்க பணிகளுக்காக சாலை துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 22ம் தேதி படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து திருத்தணி- திருவள்ளூர் இடையில் பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள், சிறு பாலங்கள், சுரங்கப்பாதைகள், இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வரும் ஆற்காடு குப்பம் பகுதிகளில் 2 உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தில் போக்குவரத்து சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட சாலையில் சென்று வர அவதிப்பட்ட கனரக வாகனங்கள், பேருந்துகள், கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் எளிதாக மேம்பாலம் வழியாக கடந்து செல்கின்றன. இதனால் வாகன நெரிசல் மற்றும் விபத்துகள் குறைந்துள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: