வீட்டுமனை வழங்குவதாக வதந்தி குடிசை போட வந்த மக்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை

பள்ளிபாளையம், மார்ச்  7: பள்ளிபாளையம் அடுத்த வெப்படை ஓடை புறம்போக்கில் வீட்டுமனை தருவதாக வந்த  வதந்தியை நம்பி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிபாளையம் அடுத்த செட்டியார்கடை பகுதியில், தோப்புகாடு அரசு  புறம்போக்கு ஓடையில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை வீட்டு மனைகளாக  பிரித்து தருவதாக கூறி, சிலர் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர்.  நிலம் கேட்டு பொதுமக்கள் தொந்தரவு செய்ததால், பணம் பெற்றவர்களில் சிலர்,  நிலத்தை பிரித்து தருவதாக வதந்தி கிளப்பி உள்ளனர். இதையடுத்து நேற்று  கோயிந்தம்பாளையம், பாதரை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நூற்றுக்கும்  மேற்பட்டோர், தோப்புகாடு புறம்போக்கு நிலத்தில் திரண்டு, குடிசை  போட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் தாசில்தார்  தங்கம், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதில் சிலர், வீட்டுமனை தருவதாக கூறி பணம் வசூல்  செய்ததாகவும், நிலத்தை கேட்ட போது இன்று (நேற்று) பிரித்து தருவதாக கூறினர்  என்றனர், மேலும், வீட்டுமனை இல்லாத தங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும்  அதற்கான பட்டா வழங்க வேண்டுமென முறையிட்டனர். பிரச்னைக்குரிய  இடம் அரசின் ஓடை புறம்போக்கு வகையை சேர்ந்தது. நீர்வழித்தடமாக உள்ளதால்,  அதில் பட்டா கொடுக்க சட்டத்தில் இடமில்லை. மேலும் தற்போது தேர்தல் நடைமுறை  விதிகள் அமலில் இருப்பதால், அரசு நலத்திட்டங்கள் எதுவும் வழங்கப்படாது.  பொது மக்கள் பிரச்னை தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தால், அதன்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனால் சமாதானமடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: