80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் ஓட்டு

நாமக்கல், மார்ச் 7: நாமக்கல் மாவட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்  34,791 பேர் உள்ளனர். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாமக்கல்லில் சட்டமன்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டைகுமார்  தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் மெகராஜ் கலந்துகொண்டு பேசினார். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக 12டி படிவம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின், கலெக்டர் மெகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு, தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. இந்த புதிய நடைமுறை குறித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள். விருப்பம் உள்ளவர்கள் 12-டி படிவத்தை வழங்கி, நிரப்பி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தபால் ஓட்டுபோட ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் இது போன்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் தமிழ்மணி மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>