ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை இடிக்க எதிர்ப்பு

திருச்செங்கோடு, மார்ச் 7: திருச்செங்கோடு ஒன்றியம் பிரிதி ஊராட்சி சொட்டைகாடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம்(65). இவரது மகன் கோபால்(40) என்பவருக்கும், நெட்டவேலாம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி(45) என்பவருக்கும்  நிலப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பொய்யேரி பகுதியில், 4 ஏக்கர் குட்டை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சண்முகம் மற்றும் கோபால் வீடு கட்டியதுடன், விவசாயம் செய்து வருவதாக பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு நிலத்தை, வருவாய் துறையினர் மற்றும் பிடிஓ அகற்றவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வருவாய் துறையினர் நடைமுறை படுத்தவில்லை. இதையடுத்து பழனிசாமி  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உடனடியாக  ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, கோபால் வீட்டிற்கு வந்த வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு இடத்தை காலிசெய்யும்படி நோட்டீஸ் கொடுத்தனர். வேறு வீடுகட்டி கொள்ள தனக்கு ஒருமாத கால அவகாசம் வேண்டும் என கோபால் கேட்டார். ஆனால் இதை அதிகாரிகள் ஏற்கவில்லை. நேற்று காலை தாசில்தார் பாஸ்கரன், பிடிஓ டேவிட் ஆகியோர் புறநகர் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனத்துடன் ஆக்கிரமிப்பை அகற்றச்சென்றனர். இதனை அறிந்த கிராமமக்கள் ஒன்று திரண்டு, வருவாய் துறையினரை மறித்து, வீட்டை காலி செய்ய ஒருமாத கால அவகாசம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து நடந்த சமரசப் பேச்சு வார்த்தையில் விவசாய நில ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றிக் கொள்ளவும்,   வீட்டை 20 நாட்களுக்குள் அகற்றி கொள்ளவும், இருதரப்பினரும் சம்மதித்ததால், பொதுமக்கள் கலைந்துசென்றனர்.  

Related Stories: