காதல் திருமணம் செய்த கர்ப்பிணி தற்கொலை

ராசிபுரம், மார்ச் 7: ராசிபுரம் அருகேயுள்ள மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ஆனந்த்  மகள் தீபிகா(21). அங்குள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் தள்ளுவண்டியில்  சில்லி கடை நடத்தி வந்தார். அலவாய்ப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன்  சூர்யா(22), கட்டட வேலைக்கு வந்தபோது,  தீபிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில்  காதலாக மாறியது. கடந்த 7  மாதத்துக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு, அத்தனூர் அடுத்த நடுப்பட்டியில் வசித்து வந்தனர். இருவரும் வேறு  சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்தை இரு வீட்டு  பெற்றோரும் எதிர்த்தனர். குடிப்பழக்கம் உள்ள சூர்யா, சரிவர  வேலைக்கு செல்லவில்லை. இதனிடையே தீபிகா கர்ப்பமானார். இனிமேல் குடிக்காமல்  வேலைக்கு செல்ல வேண்டும் என கூறியதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, மீண்டும்  இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. சிறிது நேரத்தில் சூர்யா, வெளியே சென்றுவிட்டார். நீண்ட நேரம்  வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த  அக்கம்பக்கத்து வீட்டினர், கதவை தட்டியும் திறக்கவில்லை.  இதுகுறித்து  வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த  போலீசார், பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது,  உள்ளே தீபிகா தூக்கில் சடலமாக தொங்கினார். பின்னர், அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடுகின்றனர். திருமணமாகி 7 மாதமே ஆவதால்,  தீபிகா தற்கொலை குறித்து ஆர்டிஓ கோட்டைகுமார் விசாரித்து வருகிறார்.

Related Stories:

>