விலங்குகளின் தாகம் தீர்க்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி

ஓசூர், மார்ச் 7: கோடை காலம் துவங்கியுள்ளதால், ஓசூர் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தவிர்க்க வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை கட்டி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 29 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் 504 ச.கி.மீ பரப்பளவில், 2014ம் ஆண்டு முதல் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வனப்பகுதிகளில் அரியவகை சந்தனம், உசில், தேக்கு, ஈட்டி, குங்கிலியம், பொரசு மற்றும் பல்வகை மர வகைகளும், யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை, புள்ளிமான் போன்ற வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கோடை காலம் துவங்கி இருப்பதால், வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகிறது. அவ்வாறு வரும் மான் உள்ளிட்ட விலங்குகள் நாய்களிடமும், வாகன விபத்துகளிலும் சிக்கி உயிரிழக்கிறது. இதை கருத்தில் கொண்டு வனத்துறையினர், வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைத்து, தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: