வால்பாறை டவுனை சூழ்ந்த மூடுபனி: காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

 

வால்பாறை: வால்பாறை நகரப் பகுதியை நேற்று அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால், நகரின் பல பகுதிகள் வெண்மையான பனிப்போர்வையால் மூடப்பட்டு காணப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக மேகமூட்டம், அவ்வப்போது சாரல் மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் மூடுபனி பரவலாக காணப்படுகிறது.

நகரின் முக்கிய சாலைகள், தேயிலைத்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புற மலைச்சரிவுகள் அனைத்தும் பனிமூட்டத்தில் மறைந்து காணப்பட்டதால், வழக்கமான பரபரப்புக்கு மாறாக அமைதியான சூழல் நிலவியது. சில இடங்களில் பார்வைத்திறன் குறைந்ததால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காலநிலை மாற்றத்தால் பகல் நேரத்திலும் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் குளிரை உணர்ந்தனர்.

இதனால் சூடான திண்பண்டம் மற்றும் டீ, காப்பி உள்ளிட்ட பானங்களின் விற்பனையும் நகரில் அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்தனர். வானிலை ஆய்வு தகவல்களின்படி, மேகமூட்டம், லேசான மழை மற்றும் அதிகாலை மூடுபனி நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வேகத்தை கட்டுப்படுத்தி, முகப்பு விளக்குகளை பயன்படுத்தி பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: