×

நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை: சென்னை சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை 24 மணி நேரத்தில் அகற்றாவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது’ என எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்கள் குறித்து 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

இதனையடுத்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பாக நிறுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைக்கு தயாராகி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் பல இடங்களில் நோட்டீஸ்கள் ஒட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், “சாலையோரங்களில் ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை 24 மணி நேரத்திற்குள் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்பட மாட்டாது” என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொது இடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சுத்தமாக வைத்திருக்கவும் எடுக்கப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாத வாகனங்கள் தெருக்களை அடைத்து, அவசர ஊர்திகள் (தீயணைப்பு, ஆம்புலன்ஸ்) செல்ல வழியில்லாமல் செய்வதோடு, விபத்து அபாயத்தையும் அதிகரிக்கின்றன.

மழைக்காலங்களில் இத்தகைய வாகனங்கள் நீர் தேங்குவதற்கும், கொசு உற்பத்திக்கும் காரணமாக அமைகின்றன. மாநகராட்சியின் இந்த எச்சரிக்கை பலரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்கள் பலர், “தேவையில்லாத வாகனங்கள் தெருக்களை அடைப்பது பெரும் சிரமம். இப்போது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுப்பது நல்லது” எனக் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், சில உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை அகற்ற நேரம் கோருகின்றனர். முந்தைய நடவடிக்கைகளில் 15 நாட்கள் கெடு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 24 மணி நேர கெடு விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...