கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கஞ்சா விற்ற 6 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, கார், ரூ.56 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். சென்னைப்புறநகர் பகுதியான கேளம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, பாக்கட்களில் அடைத்து விற்பனை செய்வதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் கேளம்பாக்கம், தையூர், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தையூர் ஏரிக்கரை அருகே மாறு வேடத்தில் சுற்றி வந்தனர். அப்போது, ஒரு காரில் சிலர் உட்கார்ந்து கொண்டு, பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, காரில் கஞ்சா விற்பனை நடப்பது தெரிந்தது. உடனே போலீசார், காரை சுற்றி வளைத்து 6 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் காருடன், 6 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மந்திரி பெகரா (38), அம்பத்தூர் விஜயகுமார் (26), சந்தீப்ராஜ் (26), தலைமை செயலகம் காலனி தர்மராஜ் (26), சென்னை ஆழ்வார் பேட்டை ராஜேஷ் (27), திருமுல்லைவாயல் ஸ்ரீபாலா தினேஷ் (26) என தெரிந்தது.

மேலும் விசாரணையில், விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். சந்தீப்ராஜ் பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படிக்கிறார். தர்மராஜ் பிஇ முடித்து விட்டு சிவில் இன்ஜினியராகவும், ராஜேஷ் கோயில் அர்ச்சகராகவும், ஸ்ரீபாலா தினேஷ் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராகவு உள்ளனர். ஸ்ரீபாலாதினேஷின் காரில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிந்து, 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: