×

திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’

திருச்சி, மார்ச் 6: திருச்சியில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் நாளை (7ம்தேதி) நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பேசுகிறார். திமுக 11வது மாநில மாநாட்டை திருச்சி சிறுகனூரில் சுமார் 750 ஏக்கரில் பிரமாண்டமாக நடத்த திமுக சார்பில் திட்டமிடப்பட்டது. இதில் 350 ஏக்கரில் மாநாட்டு பந்தலும், 400 ஏக்கர் பார்க்கிங் ஏரியாவும் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. இதில் சமீபத்தில் திருச்சி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாநாடு ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் திமுக மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

மாநாடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு தனித்தனியாக 3 மேடைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. மேடைகளின் இருபுறங்களிலும் தலா 300 மீட்டர் நீளத்தில் எல்இடி திரைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் நுழைவாயிலில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் கிரேன் மூலம் நடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் அனைத்து பணிகளும் 99 சதவீதம் முடிவடைந்தது.

இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று மாலை வந்த திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு பொதுக்கூட்ட ஏற்பாடுகள், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு, பம்பரமாக சுழன்று கட்டளைகளை நிறைவேற்றினார். இதற்கு முன்பாக, பொதுக்கூட்ட திடலில் டிபன் உள்ளிட்ட கடைகள் வைக்க முற்றிலும் அனுமதி இலவசம் என்ற அறிவிப்பையடுத்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடை அமைக்க அனுமதி கோரினர். இதற்கிடையில், நாளை நடைபெறும் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் தலைப்பிலான பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பை அடுத்து சிறிது ஓய்விற்கு பின், பொதுக்கூட்ட திடலில் பிரமாண்ட கொடிக்கம்பத்தில் மதியம் 1 மணிக்கு திமுக கொடியை ஏற்றி வைக்கிறார்.

அதை தொட ர்ந்து பொதுக்கூட்ட மேடை மற்றும் ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். அதன் பின்னர், திமுகவின் முன்னணி தலைவர்கள் பிரசாரம் மதியம் 2 மணி முதல் துவங்குகிறது. அதற்கு முன்பாக திமுகவின் கண்காட்சி துவக்கி வைக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். திமுக முன்னோடிகளின் பேச்சை கேட்டு, மாலை 6 மணிக்கு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையசைத்து நடந்து வந்து, புத்துணர்வு ஏற்படுத்துகிறார். அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு தமிழகத்திற்கான விடியலை துவக்கும் விதமாக எழுச்சியுரையாற்றுகிறார். முன்னதாக நேற்று மாலை பொதுக்கூட்ட திடலுக்கு வந்த முதன்மை செயலாளர் கே.என்.நேரு சூறாவளியாக சுழன்று, கட்டளைகளை பிறப்பித்து பணிகளை விரைந்து முடிக்கவும், ஏற்பாடுகள் சரியாக நடக்கிறதா என்பதை ஆய்வு செய்தது கட்சியினரிடையே பரவசத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பேசுகிறார்

Tags : Tiruchi ,Tamil ,Nadu ,
× RELATED புதுக்கோட்டை அருகே அண்ணாநகர்...