80 வயது கடந்த முதியவர்கள் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பிக்க அழைப்பு

திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சாந்தா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதில் வாக்குசாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த வாக்காளர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்படைந்துள்ளதாக சந்தேகப்படும் வாக்களிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் வாக்கை தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபோன்று தபால் வாக்குகளை பதிவு செய்ய விரும்பினால் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவம்-12டி யை பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தபால் வாக்கு அளிக்கும் மாற்றுதிறனாளிகள், மாற்றுதிறனாளிகள் என்பதற்கான தகுந்த அரசு சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் கொரோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழினை வழங்கவேண்டும். மேற்கண்ட 12டி படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் மட்டுமே அந்தந்த வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்கி அதற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிப்பார்கள்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும்போது அவர்கள் அங்கு இல்லாவிட்டால் 5 தினங்களுக்குள் இருமுறை சென்று படிவங்கள் பெற்று வருவார்கள். மேலும் சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க விருப்பமில்லை எனில் நேரில் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்கலாம். மேலும் இதுபோன்று தபால் ஓட்டு வழங்கும் பட்சத்தில் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களுக்கு எதிரே போஸ்டல் பேலட் என குறிப்பிடப்படும். இதன்பிறகு மட்டுமே யார் யாருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டதோ அவர்களின் பட்டியலை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அச்சிடப்பட்ட நகல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: