திருவாரூர் தொகுதி வாக்குபெட்டிகள் பாதுகாப்பு அறையில் கேமரா பொருத்தும் பணி

திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் தொகுதியில் வாக்கு பெட்டிகள் வைக்கும் அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 26ம் தேதி மாலை முதல் தேர்தல் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, மற்றும் நன்னிலம் என 4 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன. இதில் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் சேர்த்து 5 லட்சத்து 14 ஆயிரத்து 536 ஆண், 5 லட்சத்து 35 ஆயிரத்து 963 பெண், இதரர் 70 பேர் என மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரத்து 569 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் வரையில் மொத்தம் ஆயிரத்து 168 வாக்குச்சாவடி மையங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் புதிதாக 286 துணை வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1454 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர் தொகுதியில் 383 வாக்குச்சாவடிகளும், திருத்துறைப்பூண்டியில் 336, மன்னார்குடியில் 357, நன்னிலத்தில் 379 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தமாதம் நடைபெற உள்ள தேர்தலுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அறைகளுக்கு இரு தினங்களுக்குள் எடுத்துச் செல்லும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுபோன்று தாலுகா அலுவலகங்களில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படுவதையொட்டி அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நக்கீரன் மற்றும் அலுவலர்கள் மூலம் நேற்று இந்த பணி நடைபெற்றது.

Related Stories: