×

பாடைக்காவடி திருவிழாவையொட்டி வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் உற்சவம்

வலங்கைமான், மார்ச் 6: வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் கோவில் பாடை காவடி திருவிழாவையொட்டி நேற்று பூச்சொரிதல் விழா துவங்கியது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட வரதராஜன்பேட்டை தெருவில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இது சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறும்.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு காவடி, தொட்டில் காவடி, பறவைக் காவடி, பால்குடம் மற்றும் பாடை காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். கடந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசின் உத்தரவுக்கு இணங்க பாடை காவடி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

அதனை அடுத்து ஆவணி மாத தெப்பத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு பாடை காவடி திருவிழாவிற்கான முதற்கட்ட பணியாக பூச்சொரிதல் விழா நேற்று துவங்கியது. முன்னதாக அம்மன்படம் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் படத்திற்கு நறுமண மலர்களை கொண்டு வணங்கினர். வருகிற 7ம் தேதி தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 14ம் தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்வான பாடை காவடி திருவிழா வருகிற 21ம் தேதியும், புஷ்ப பல்லக்கு விழா வருகிற 28ம் தேதியும், அதனை அடுத்து ஏப்ரல் மாதம் நான்காம் தேதி நான்காம் ஞாயிறு திருவிழாவும், ஏப்ரல் 11ம் தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடைபெற உள்ளது . விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் மற்றும் அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

Tags : Valangaiman Mahamariamman Temple ,Padaikavadi festival ,
× RELATED வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில்...