×

2026-27ம் கல்வியாண்டிற்கான செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளியில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூர், ஜூன் 8: தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம் மேம்பாலம் அருகே மாற்றுதிறனாளிகள் நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, விடுதி வசதியுடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 2026-27ம் கல்வியாண்டிற்கான 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை மே 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பள்ளியில் உணவு, கல்வி உபகரணங்கள், சீருடை காலணி மற்றும் கணித உபகரணங்கள், காதொலிக்கருவி போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் தாங்களாகவே தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நடைப்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், நடனம், கராத்தே, யோகா, சிலம்பம், இசை போன்ற இதரக் கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளியில், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தங்குவதற்கான விடுதி வசதிகள் உள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது உறவினர்கள், குழந்தைகள் யாரேனும் செவித்திறன் பாதிக்கப்பட்டு சிறப்பு பள்ளியில் சேர்க்கை தேவைப்படுவோர் பள்ளியில் நேரில் அணுகியும் அல்லது பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் ஆகியோரது தொலைபேசி எண்ணில் (9597465717, 9944114570) தொடர்பு கொண்டு பள்ளியில் சேர்க்கை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Government Higher Secondary School for the Hearing Impaired ,taluk ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...