கரூர், ஜூன் 8: நுண்ணீர் பாசனத் திட்டத்தில் குறைந்த நீரில் அதிக பயிர் சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர்பாசனதிட்டம் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இத்திட்டம் கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் 2026-27ம் ஆண்டிற்கு சுமார் 1370 ஹெக்டர் பரப்பில் ரூ.753.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டீல் செயல்படுத்தப்படவுள்ளது. இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் இந்த சூழலில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது.
சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்பாசன அமைப்புகள் ஹெக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து ரூ 1.27364 லட்சம் வரையிலும் இதர விவசாயிகளுக்கு (75 சதவீத மானியத்தில்) ரூ. 0.97039 லட்சம் வரையிலும் (1.2m x 0.6m இடைவெளி) வழங்கப்படுகிறது. அனைத்து தோட்டக்கலை பயிர்களுக்கும் சிறு விவசாயிகள் 5 ஏக்கர் வரையிலும், குறு விவசாயிகள் 2.50 ஏக்கர் வரையிலும் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்ளலாம். இதர விவசாயிகள் 75 சதவீத மானியத்தில் 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
பயிர்களின் இடைவெளிக்கு ஏற்றாற்போல் மானியத் தொகை மாறுபடும். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து 7 வருடம் நிறைவுற்று இருந்தால் புதிதாக மீண்டும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். மேலும், சேதம் அடைந்துள்ள உபகரணங்கள் பக்கவாட்டு குழாய் மட்டும் மானியத்தில் பெற்று சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து 3 ஆண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டு நீர் பாசனமாக மாற்றி கொள்ளலாம்.
இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், அடங்கல், கூட்டு வரைபடம், கணினி சிட்டா, மறு ஆய்வு தீர்வு பதிவேடு, நிலவரைபடம், சிறு/ குறு விவசாயிகளாக இருப்பின் அதற்காக வட்டாச்சியரிடம் இருந்து பெறப்பட்ட சிறு/ குறு விவசாயி சான்று, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் நிலவுடைமை சான்று, கூட்டு சிட்டாவாக இருந்தால் நில பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகியும் அல்லது tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பித்து நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
