×

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக்கழகத்தில் எரிவாயு நிரப்புவதற்கான வசதியின்றி காத்திருக்கும் 20 சிஎன்ஜி பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை தேவை

திண்டுக்கல், ஜூன் 8: திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்
20 சிஎன்ஜி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் செலவைக் குறைக்கவும் முடிவு செய்து, அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் டீசல் மூலம் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அதிக எண்ணிக்கையில் சிஎன்ஜி எனப்படும் காஸ் வாயிலாக இயங்கும் பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது. இதன்படி 750 சிஎன்ஜி பஸ்கள் வாங்கப்பட்டன. இவற்றினை, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கும்பகோணம் என பல்வேறு அரசுப்போக்குவரத்து கோட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றில் மதுரை கோட்டத்தின் கீழ் வரப்பெற்ற சிஎன்ஜி பேருந்துகள், மதுரையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் இக்கோட்டத்தின் கட்டுபபாட்டில் உள்ள திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 20 சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வந்து சேர்ந்தன. ஆனால் இந்த பேருந்துகள் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்திலேயே பரிதாபமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் சிஎன்ஜி உதவியுடன் இயக்கப்படும் வாகனங்களுக்கான எரிவாயு நிரப்புவதற்கான வசதி 2 இடங்களில் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி நிலக்கோட்டை மற்றும் பழநி ஆகிய இடங்களில் மட்டுமே, தனியார் நிறுவனங்களின் உதவியுடன் வாகனங்களுக்கு சிஎன்ஜி நிரப்பும் வசதி உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கான தட்டுப்பாட்டு ஏற்பட்டபோது, சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் பணிகளிலும் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் அவற்றின் நிலை ஓரளவு சீராகியுள்ளதால், இந்த தனியார் மையங்களில் கார்களுக்கு நிரப்பும் வகையில் மட்டுமே சிஎன்ஜி எரிவாயு தற்போது இருப்பில் உள்ளது. சில நேரங்களில் அதிலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் அரசு போக்குவரத்துக் கழகத்தின்ன சிஎன்ஜி பஸ்களை இயக்குவதில் கடும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக திண்டுக்கல் அரசுப்போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் சிலிண்டர்கள்அமைக்க வேண்டும். அதிலிருந்து இந்த பேருந்துகளுக்கு சிஎன்ஜி நிரப்பி பயணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கொள்முதல் செய்த 20 சிஎன்ஜி பேருந்துகளை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்திருப்பது, பொதுமக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்திற்கு 20 சிஎன்ஜி பஸ்கள் வந்துள்ளன. அதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு எண் பெறும் பணி நடக்கிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்திற்கென சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் இடம் இதுவரை இல்லை. அதை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பங்க் உரிமையாளர்களிடம் எரிவாயு நிரப்ப பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த உடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ்கள் இயக்கப்படும்’ என்றனர்.

Tags : Dindigul State Transport Corporation ,Dindigul ,DMK ,Tamil Nadu ,
× RELATED கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட...