×

வாகனஓட்டிகள் அவதி வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்பது கண்டறியப்பட்டால் நடவடிக்கை

கரூர், மார்ச் 6: வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணமோ, பொருளோ கொடுப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்கள், வீடியோ எடுக்கும் குழுக்கள், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் விளம்பரங்களை கண்காணிக்கும் குழு, கணக்கீட்டு குழு, உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு ஆகிய குழுக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான மலர்விழி தலைமை வகித்து பேசுகையில், கரூர் சட்டமன்ற தொகுதியில் 6 பறக்கும் படை குழுக்கள், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 6 பறக்கும் படை, 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழு, குளித்தலை தொகுதியில் 3 பறக்கும் படை, 3 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழு, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 3 பறக்கும் படை, 3 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும், நான்கு சட்டமன்ற தொகுதிக்கும் 4 தேர்தல் பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழுவும், 4 தொலைக்காட்சி விளம்பரங்களை கண்காணிக்கும் குழுக்களும், 4 கணக்கீட்டு குழுக்களும், 4 உதவி தேர்தல் செலவின பார்வையாளர் குழுக்களும் என 52 குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 232 பேர் சுழற்சி முறையில் 24மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தேர்தலை நேர்மையாக நடைபெற உங்களின் பங்களிப்பு முக்கியமானது. அனைத்து அலுவலர்களும் ஒற்றுமையுடம் செயல்பட்டு தேர்தல் விதிமீறல்கள் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களை வீடியோ எடுக்கும் குழுவினர் அன்றைய தினமே வீடியோ கண்காணிக்கும் குழுவினரிடம் வீடியோக்களை ஒப்படைக்க வேண்டும். இதனை ஆய்வு செய்து செலவினத்தொகையை கணக்கிட்டு நிழல் பதிவேட்டில் பதிய வேண்டும். வாக்காளர்களுக்கு வாக்கு அளிப்பதற்காக பணமோ, பொருளோ கொடுப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனச் சோதனையின் போது ரூ. 50ஆயிரம் வரை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி கூடுதலாக எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை சிறப்பாக நடத்திட அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களில் இடம்பெற்றுள்ள 232 நபர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்அலி உட்பட அனைத்து குழுவினர்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தாந்தோணிமலை வீட்டுவசதி வாரிய...