கேளூர் அரசு கால்நடை மருந்தகத்தில் பசுவின் வயிற்றில் இருந்த இரும்பு கம்பி அறுவை சிகிச்சையால் அகற்றம்

ஆரணி, மார்ச் 6: கேளூர் கால்நடை மருந்தகத்தில், பசுவின் வயிற்றில் இருந்த இரும்பு கம்பி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கலசபாக்கம் அருகே உள்ள மேல்ஆரணி கிராமத்தை சேர்ந்தவர் சரிதா(40). கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று, கடந்த சில தினங்களாக இரை எதுவும் எடுக்காமல், சாணம் போட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.எனவே, சரிதா அந்த பசுவை, மேல்ஆரணி கிராமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார். கால்நடை உதவி மருத்துவர் வித்யாசாகர் பசுவை பரிசோதனை செய்ததில் அதன் மலக்குடலில் இரும்பு கம்பி ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக கேளூர் அரசு கால்நடை மருந்தகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு உதவி மருத்துவர் சாரங்கபாணி பரிசோதனை செய்து, பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்து சுமார் 20 செ.மீ. நீளமுள்ள கம்பியை அகற்றி பசுவை காப்பாற்றினார். பின்னர், அவர் கூறுகையில், `மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும்போது சிறிய கம்பிகள் வாய்வழியாக சென்று இரைப்பையில் சிக்கி, நுரையீரல் அல்லது இதயம் பாதித்து உயிரிழக்க நேரிடும். ஆனால் இந்த பசுவின் இரைப்பையை கடந்து மலக்குடல் வழியாக கம்பி சென்றதால் சிறிய அறுவை சிகிச்சை மூலம் கம்பியை அகற்றி பசுவை காப்பாற்ற முடிந்தது' என்றார்.

Related Stories:

>