வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் 66 வயதில் முதன்முதலாக வாக்களிக்கும் விறகு வெட்டும் தொழிலாளி கலெக்டர் அடையாள அட்டை வழங்கினார்

வந்தவாசி, மார்ச் 6: வந்தவாசி அருகே தேர்தலில் முதன்முதலாக வாக்களிக்கும் 66 வயது விறகு வெட்டும் தொழிலாளிக்கு வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த திருமால்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விறகு வெட்டும் தொழிலாளி கன்னியப்பன்(66). இவருக்கு நிரந்தர முகவரி இல்லாததால், வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல், இதுவரையில் அவர் தேர்தலில் வாக்களிக்கவில்லையாம்.இந்நிலையில், வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் விறகு வெட்டும் தொழிலாளர்கள் 149 பேருக்கு அரசு சார்பில் இலவமாக வீடு கட்டி வழங்கப்பட்டது. அதில் கன்னியப்பன் குடும்பத்துக்கும் வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்துக்கு தற்போது நிரந்தர முகவரி கிடைத்துள்ளதால், வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி மீசநல்லூர் கிராமத்தில் ஆய்வு செய்ய வந்தபோது, கன்னியப்பனுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். மேலும், கன்னியப்பன் முதன்முதலாக வாக்களிப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கலெக்டர் அவருக்கு செயல்விளக்கம் அளித்தார். அப்போது, பயிற்சி உதவி கலெக்டர் அஜிதாபேகம், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, தாசில்தார் திருநாவுக்கரசு, பிடிஓக்கள் காந்திமதி, கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

பின்னர், கலெக்டர் சந்தீப்நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது: அதிகாரிகள் சோதனைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை 7 நாட்களில் செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கு 300 வீல்சேர்கள் உள்ளது. கூடுதலாக ஆயிரம் வீல்சேர்கள் வாங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 80 வயது கடந்தவர்கள் 48 ஆயிரம் பேர் உள்ளனர். அதேபோல், 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க தனியாக டோக்கன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் கவச உடை அணிந்து வந்து வாக்களிக்க வேண்டும். அனைத்து வாக்காளர்களும் முகக்கவசத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>