கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

காசர்கோட்: கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா முழுவதும் பெய்து வரும் தொடர்ச்சியான கனமழையால் பரவலாக சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று UBMC என்ற பள்ளியின் பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் ஒன்று, அருகிலிருந்த சாலையின் மீது சரிந்து விழுந்தது. கட்டமைப்பு ரீதியாக பலவீனமாக இருந்ததை தொடர்ந்து சமீபத்தில் தான் குறிப்பிட்ட பள்ளியின் கல் சுவர் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் பெய்த தொடர் கனமழையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் முழுமையாக இடிந்து விழுந்தது.இந்த சுவர் இடிந்து விழும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக சுவர் இடிந்து விழுந்ததருணத்தில் அப்பகுதியிலோ அல்லது சாலையிலோ மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரும் துயரச் சம்பவம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கேரள அரசு, மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

Related Stories: