×

“சாப்பிட சாப்பாடு கூட இருக்காது” – ஐஏஎஸ் அகாடமி விழாவில் உருகிய அமைச்சர் அருண் ராஜ்

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தி இம்பாக்ட் ஐஏஎஸ் அகாடமியின் 20-வது ஆண்டு நிறைவு விழாவில், தமிழக மருத்துவத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண் ராஜ் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில், தான் ஒரு சிவில் சர்வீஸ் மாணவனாக இருந்தபோது சந்தித்த சவால்களை அவர் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் அருண் ராஜ் பேசியதாவது, “2003-ல் எம்பிபிஎஸ் முடித்த பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள தக்கதாட்டி என்ற சிறிய கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரியாகச் சேர்ந்தேன். அங்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கியபோது நேரத்தைச் சேமிக்க அங்கேயே தங்கிப் படித்தேன். அந்தச் சிறிய கிராமத்தில் இரவு 6 மணிக்கெல்லாம் ஹோட்டல்களை மூடிவிடுவார்கள் என்பதால், பக்கத்து டவுனில் இருந்து வரும் பேருந்தில்தான் எனக்கு இரவு உணவை யாராவது கொடுத்து அனுப்புவார்கள். பல நேரங்களில் அவர்கள் சாப்பாடு அனுப்ப மறந்துவிடுவார்கள், நானும் சாப்பிடாமலேயே படித்து எக்ஸாம் எழுதினேன்” என்று தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ந்தார்.

மேலும், “சிவில் சர்வீஸ் தேர்வில் சரியான விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் தேவை. அதேபோல், எத்தனை தோல்விகள் வந்தாலும் தளர்ந்து போகாமல் உழைத்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். முக்கியமாக, எந்த இடத்திற்குச் சென்றாலும் நமது அடையாளத்தை நாம் எப்போதும் இழந்துவிடக் கூடாது” என்று அகாடமி மாணவர்களுக்கு அவர் ஊக்கமளித்துப் பேசினார்.

Tags : Minister ,Arun Raj ,IAS Academy ,Chennai ,Tamil Nadu ,Medical ,Dr. ,K.G. Arun Raj ,The Impact IAS Academy ,Anna Nagar, Chennai ,
× RELATED மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்