யார் மனமும் புண்படும் வகையில் வால்போஸ்டர் அடிக்க கூடாது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சிவகங்கை, மார்ச் 6: யார் மனமும் புண்படும் வகையில் வால்போஸ்டர், நோட்டீஸ் அடிக்க கூடாது என தேர்தல் ஆணையம் அச்சக உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அச்சக உரிமையாளர்களுக்கு பிறப்பித்துள்ள விதிமுறைகள் வருமாறு: தேர்தல் தொடர்பான போஸ்டர், நோட்டீஸ் அடிக்க வரும் அரசியல் கட்சியினர்- தனி நபர்களிடம் 2 சாட்சிகளுடன் உறுதி மொழி படிவம் எழுதி வாங்க வேண்டும். அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள், நோட்டீஸ்கள் 2 நகல்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

மொத்த போஸ்டர், நோட்டீஸ்களின் எண்ணிக்கையை தெரியப்படுத்த வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வகையிலோ, யார் மனமும் புண்படும் வகையிலோ, தனிநபரை விமர்சனம் செய்யும் வகையிலோ மதம், சாதி, இனம், மொழி, வகுப்பு தொடர்பான எதிர்ப்பு வாசகங்களுடன் அச்சடிக்க கூடாது. சுயேட்சை வேட்பாளர் பெயருடன் நோட்டீஸ், போஸ்டர் அச்சடித்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் அனுமதி பெற வேண்டும். அனைத்து நோட்டீஸ்கள், போஸ்டர்களிலும் அச்சக பெயர், அச்சக உரிமையாளர் பெயர், முகவரி துண்டுபிரசுரத்தின் முன்பக்கம் இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் அச்சகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: