தென்காசி மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடலாம்

தென்காசி, மார்ச் 6:  தென்காசி மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என  கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைய நோய் சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதர நாள்பட்ட நோய் உடையோர் கொரோனாவால் பாதிப்படைந்து சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது.  தற்போது கொரோனா தொற்று நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நமது சுகாதாரத்துறை மூலம் இரு தவணைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி இந்த தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தின் 2ம் கட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் துவங்கி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இணை நோயுடன் போராடும் 45 முதல் 59 வயதை அவருக்கும் தடுப்பூசி போடப்படுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனைகள் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 250 வரை கட்டணம் செலுத்தியும், போட்டுக்கொள்ள ஆணை பிறப்பித்துள்ளது. தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை அரசு மருத்துவமனைகளிலும், நெட்டூர், சொக்கம்பட்டி, இலத்தூர், கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம், பாவூர்சத்திரம், சேர்ந்தமரம், வடகரை, வாசுதேவநல்லூர், கடையம் பகுதிகளில் உள்ள  மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தென்காசி மீரான் மருத்துவமனை, சாந்தி மருத்துவமனை, சங்கரன்கோவில் எம்எம்எஸ் மருத்துவமனை ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று தென்காசி மீரான் மருத்துவமனையில் டாக்டர் அப்துல் அஜீஸ் முன்னிலையில் மூத்த குடிமக்கள் தலைவர் அழகராஜா தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Related Stories: