×

தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேலம், மார்ச் 6:தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை, கலெக்டர் ராமன் நேற்று  தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் செல்லும் இந்த வாகனம், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்கள் தேர்தலின் போது தங்களின் வாக்குரிமையை கட்டாயம் செலுத்தும் வகையிலும், 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் பொருட்டும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. மேலும், இளம் வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் கருவியின் செயல்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம், ஊடக மையம் மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) தமிழரசன், (தேர்தல்) தியாகராஜன், மாநகராட்சி உதவி கமிஷனர் சரவணன், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பொறுப்பு அலுவலர் அண்ணாதுரை, தேர்தல் தாசில்தார் சிராஜூதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : -Awareness Video Vehicle Collector ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை