சேலம்: சேலத்தில், செக் மோசடி வழக்கில் வின் ஸ்டார் சிவக்குமாருக்கு 11 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீப்பளித்தது. சேலத்தில் வின்ஸ்டார் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் சிவக்குமார் (50). இவர் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார். அவ்வாறு வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையங்களில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரியல் எஸ்டேட் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை வைத்து சிவக்குமார் வாங்கி வைத்திருந்த நிலத்தை ஏலம் விட்டு பணத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்தை சேர்ந்த தொழிலதிபரான இளங்கோவன், வின் ஸ்டார் சிவக்குமாருக்கு 50லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார்.
இதற்காக அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து இளங்கோவன் சேலம் 3வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் முத்துகிருஷ்ண முரளிதாஸ், சிவக்குமாருக்கு 11 மாதம் சிறை தண்டனையும், ரூ.1 கோடி வழங்கவும் உத்தரவிட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
