குடிநீர் தொட்டி கட்டுவதற்காக கதிரடிக்கும் களத்தை அகற்ற மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு

சேந்தமங்கலம்,  மார்ச் 6: தாத்தையங்கார்பட்டியில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக, கதிரடிக்கும் களத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.புதுச்சத்திரம் ஒன்றியம், தாத்தையங்கார்பட்டி பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது: தாத்தையங்கார்பட்டியில் ஆதிதிராவிட தெரு  காளியம்மன் கோயில் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய பொது  நிதியில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதியை  சேர்ந்த விவசாயிகள், தங்களின் தோட்டத்தில் விளையும் தானியங்களை கொண்டு  வந்து காய வைக்கவும், பதர்களை பிரித்தெடுக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும்,  காளியம்மன் கோயில் பண்டிகையின் போது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு  அங்கு தான் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ஊராட்சி  நிர்வாகம், காவிரி குடிநீரை சேமிக்க  தரைமட்ட தொட்டி கட்ட முடிவு செய்துள்ளது. அதற்காக கதிரடிக்கும்  களத்தை முற்றிலும் அகற்றி விட்டு, தொட்டி அமைக்க ஏற்பாடுகளை செய்து  வருகின்றனர். தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், இந்த புதிய  திட்டத்தை உடனே நிறுத்தி, குடிநீர் தொட்டியை வேறு இடத்தில் கட்ட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: