வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதால் அரிய வகை மரக்கன்றுகள், மூலிகைகள் அழியும் அபாயம்

தர்மபுரி, மார்ச் 6: தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகளில் கால்நடைகளை பட்டி வைத்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதால் அரிய வகை மூலிகை, மரக்கன்றுகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர், பென்னாகரம், பெரும்பாலை, ஏரியூர், கம்மம்பட்டி, ஒகேனக்கல், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், தீர்த்தமலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளை அடர்ந்த வனப்பகுதியாக்க, பல அரியவகை மரக்கன்றுகளை நட்டு, வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளை பாதுகாக்க, குடிநீர் வசதி மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்ய, ஆண்டு தோறும் அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தொப்பூர், அரூர் தீர்த்தமலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வனத்துறையினரே பணம் மற்றும் ஆட்டு இறைச்சிக்காக, கால்நடைகள் வளர்ப்போரிடம், பேரம் பேசி கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கின்றனர். இதனால் நல்ல நிலையில் வளரக்கூடிய மரக்கன்றுகளை கால்நடைகள் சாப்பிட்டு அழிக்கின்றன. இதனால் காடுகள் புதியதாக உருவாக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த காலங்களில் வனப்பகுதியில் வெள்ளாடு, செம்மறி மற்றும் குறி ஆடுகள் என கால்நடைகளை வளர்ப்போர், வனத்துறைக்கு தெரியாமல் வனப்பகுதிகளில் மேய்த்து வருவார்கள். வனத்துறையினர் பார்த்தால் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.

ஆனால், தற்போது தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில், பட்டி அமைத்து கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இவ்வாறு கால்நடைகளை வளர்த்து வருவோர், வனப்பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி, தங்களது பட்டி ஆடுகளுக்கு தீவணமாக போட்டு வருகின்றனர். இதனால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், பாலக்கோடு வனச்சரகத்தில் மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி யானை மிதித்து பலியானார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தர்மபுரி மாவட்ட வனப்பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்போரிடம் பணம் பெற்றுக்கொண்டு, மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனால் அரிய வகை மரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, வனப்பகுதியில் பெரிய மரங்களை வளர்க்கவும், புதிய காடுகளை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒருசிலர் தவறு செய்கின்றனர். அவர்களை வனத்துறை கண்டறிந்து தடுத்து, காடுகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வனப்பகுதிக்குள் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருசிலர் தடையை மீறி மேய்ச்சலுக்கு செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது வறட்சி தொடங்கிய நிலையில், வனப்பகுதியை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,’ என்றனர்.

Related Stories: