சென்னை ரவுடி கொலை வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

கள்ளக்குறிச்சி, மார்ச் 6:      சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் சேகர் என்பவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதில் ஏற்பட்ட முன்விரோத தகராறில் மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் என்பவர் சேகரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக சேகர் மகன் அழகுராஜா மற்றும் அழகுராஜாவின் தாய் ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு சென்று வந்தபோது சிவக்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அழகுராஜா மற்றும் அவரது தாயை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அழகுராஜா மற்றும் 4 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் ரவுடி சிவக்குமாரை அசோக்நகர் பகுதியில் பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.  இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அசோக்நகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி சிவக்குமாரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 5பேர் நேற்று மாலை கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். அதாவது சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சேகர் மகன் அழகுராஜா(20), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் விஷ்ணு(20), சேகர் மகன் பாலாஜி(23), மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த வேலு மகன் பாண்டியன்(45), சேனாய் நகர் பகுதியை சேர்ந்த ரோகித்ராஜ்(30) ஆகிய 5 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  சரணடைந்த 5 பேரையும் 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி அருண்பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து, 5 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>